search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தமிழக புயல்"

    வருகிற 16-ந்தேதி வரக்கூடிய புயலை எதிர்கொள்ள தமிழக அரசு தயார் நிலையில் உள்ளதாக அமைச்சர் உதயகுமார் தெரிவித்துள்ளார். #TNCyclone #MinisterUdhayakumar #TNGovt
    விராலிமலை:

    புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருட்களை வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஆகியோர் வழங்கினர் .

    பின்னர் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்ததால் கஜா புயலின் போது அதிக உயிரிழப்புகள் தடுக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு புயல் நிவாரண நிதியாக ரூ.1,104 கோடி வழங்கியுள்ளது. வேளாண்மைத் துறை சார்பில் விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்குவதற்கு இன்னமும் ரூ.2500 கோடி தேவைப்படுகிறது.

    மத்திய அரசு இதுவரை எந்த நிதி உதவியும் புயலுக்கு வழங்கவில்லை. அவர்கள் ஏற்கனவே வழங்கிய நிதியானது பேரிடர் மீட்பு நிலுவைத்தொகை. தற்போது நிவாரண பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருவதால் கிராம நிர்வாக அலுவலர்கள் தங்களது போராட்டத்தை வாபஸ் பெற்று பணிக்கு திரும்ப வேண்டும். அவர்களுடைய கோரிக்கையை அரசு பரிசீலனை செய்ய தயாராக உள்ளது.


    முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி எங்களுடைய நண்பர். அவர் அவசரப்பட்டு தி.மு.க.வில் இணையும் முடிவை எடுத்து விட்டார். முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் தலைமையில் அ.தி.மு.க. சரியான பாதையில் சென்று கொண்டிருக்கிறது. அதனால்தான் நாங்கள் நிலையாக நிற்கிறோம். தினகரனின் பழமொழி எல்லாம் இனி மக்களிடம் எடுபடாது.

    வருகிற 16-ந்தேதி வரக்கூடிய புயலை எதிர்கொள்ள தமிழக அரசு தயார் நிலையில் உள்ளது. புயலை உன்னிப்பாக கவனித்து வருகிறோம். புயல் எந்த திசையில் வரும் என்று உறுதி செய்துவிட்டு அதற்கு தகுந்தாற்போல் மக்களிடம் தெரியப்படுத்தி முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    முன்னதாக நிவாரண பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சியில் சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர் பேசியதாவது:-

    ஆயிரம் பேர் ஆயிரம் பேசலாம். ஆனால் அரசு எடுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் தான் கஜா புயலின் போது அதிக உயிரிழப்புகள் தடுக்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் 99 சதவீதம் மின்சாரம் வழங்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் இயல்பு வாழ்க்கை திரும்பி விட்டது. அடுத்தது விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய மின் கம்பங்களை சீரமைக்கும் பணி தொடங்க உள்ளது என்றார்.

    விழாவில் அமைச்சர் உதயகுமார் பேசியதாவது:-

    கஜா புயலின் தாக்கத்தில் இருந்து பொதுமக்களுக்கு பாதுகாப்பு வளையத்தை ஏற்படுத்திய அரசாக தமிழக அரசு இருந்தது. கஜா புயலை வைத்து எதிர்க்கட்சிகள் தமிழகத்தை போராட்ட களமாக மாற்ற நினைத்தால் மக்கள் அவர்களை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.

    சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பல்வேறு சோதனையான காலகட்டத்தை கடந்து சுகாதாரத் துறையில் பல்வேறு சாதனைகளை படைத்து அனைவரின் பாராட்டுக்களையும் பெற்றுள்ளார். அவர் பதவியிலேயே தொடர முடியாது என்று பேசப்பட்ட சோதனை காலக்கட்டத்தில் கூட கலங்கி விடாமல், சோர்ந்து போகாமல் சோதனைகளை சாதனைகளாக மாற்றியமைத்தவர் விஜயபாஸ்கர்.

    கஜா புயல் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மக்களோடு களத்தில் நின்று மீட்பு பணிகளில் துரிதமாக ஈடுபட்டவர். அவர் மேற்கொண்ட நடவடிக்கையால் தான் புயல் பாதித்த மாவட்டங்களில் தொற்று நோய் பாதிப்பு ஏதும் ஏற்படவில்லை. நிவாரண பணிகள் முடிந்த பிறகு எந்த விவாதத்திற்கும் நாங்கள் தயாராக உள்ளோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.  #TNCyclone #MinisterUdhayakumar #TNGovt
    ×